Scroll

Putra Kameshti Homam on 13/10/2018 @ Chennai and registration Module has been started now

12 December 2013

ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம் - Lakshmi Kubera Vratham

ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்

நைமிசாரண்யத்தில் மஹரிஷிகள் பலவிதமான பூஜைகள் மற்றும் விரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி ‘‘கலியுகத்தில் பொருள் இல்லாமல் அருள் பெற முடியாது என்ற நிலை உருவாகப் போகிறது’’ என்றார்.
தொடர்ந்து நாரதர் “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹாசிவராத்திரி விரதம், பௌர்ணமி விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விரதங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கப் போகிற விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்தான்.
ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜையைச் செய்பவர்கள் பெரும் நிதியினைப் பெறுவார்கள்’’ என்றார்.
மஹரிஷிகள், ‘‘நாரதரே! நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விரதங்களையும், பூஜைகளையும் அனுஷ்டிக்க பொருள் கட்டாயம் தேவையா?’’ என்று கேட்டனர்.
நாரதர், ‘‘ஓ மகரிஷிகளே கேளுங்கள். கலியுகத்தில் காற்று, நீர் கூட காசு கொடுத்தால்தான் கிடைக்கும். பொருளில்லாமல் அருள் தேட முடியாது. அவ்விதப் பொருளை ஒ ருவன் சிறந்த முறையில் அடைந்தால் அவனால் அருள் தேடவும் புண்ணியம் தேடவும் முடியும்’’ என்றார்.
‘சரி அதற்கான வழிமுறைகளைக் கூறுங்கள்’ என்று மஹரிஷிகள் கேட்டனர்.
நாரதர், தீபாவளியன்று செய்ய வேண்டிய ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜைதான் இதற்கான ஒரே வழிமுறை. ‘குபேர பகவானே செல்வத்தைத் தரக்கூடியவன். இந்த குபேர பகவான் மகாலக்ஷ்மியைக் குறித்து கடுந்தவம் செய்து குபேர சம்பத்தைப் பெற்றவன். சங்கநிதி, பதுமநிதி உட்பட நவநிதிகளை வரமாகப் பெற்றான். விச்ரவாசு முனிவருக்குப் பிறந்த இவன் ராவணனின் சகோதரன்.
காசி காண்டத்தில் குபேரனது பெருமை பேசப்படுகிறது. இவன் ஒரு ஜென்மத்தில் எலியாகப் பிறந்து ஒரு சிவாலயத்தில் வசித்தபோது பாம்பு இவனைத் துரத்த, பாம்புக்கு பயந்து சிவாலயத்திற்குள் சென்று விளக்கின் மேல் ஏறியதாகவும், அங்கு அணைய இருந்த விளக்கு இவர் அசைத்ததால் மீண்டும் பிரகாசமாக எரியத் தொடங்கியது. இதனால் திருவிளக்குப் போட்ட புண்ணியம் கிடைத்தது என்பார்கள். அதனால் குபேரனாகப் பிறந்ததாகச் சொல்லுவார்கள்.
மற்றொரு புராணத்தில் இவர் வராஹ காம்பிலி தேசத்தில் வேள்வி தத்தன் என்பவருக்கு குணநிதி என்ற பெயருடன் பிறந்து அவரின் பெருஞ்செல்வத்தை சூதிலும், மாதி லும் தொலைத்ததாகக் கூறுவார்கள். நல்ல பெண்ணை இவருக்குத் திருமணம் செய்து வைத்தும் இவர் திருந்தவில்லை. பின் குடும்பத்தினர் இவரை விலக்கி வைத்ததாகவும், இவர் வறுமையில் நொந்து ஒரு சிவராத்திரியில் சிவபக்தர்களுடன் சிவாலயம் சென்றார்.
அங்கு சன்னிதானத்தில் பூஜைகள் முடிந்து அனைவரும் உறங்கும்போது சிவன் சன்னதியில் சென்று அங்கு இருட்டாக இருந்ததால், அங்கிருந்த விளக்கை நன்கு எரியச் செய்துவிட்டு, தாங்காத பசியால் சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை உண்டார். பின் திரும்பி வருகையில் அங்கிருந்த காவலர்களால் பிடிக்கப்பட்டு கள்வன் எனக் கூறி கொலை செய்யப்பட்டார்.
அகால மரணம் அடைந்தவரை எமகிங்கரர்கள் பிடித்து எமலோகம் இழுத்துச் செல்ல முயல, அங்கு வந்த சிவகணங்கள் ‘இவரை நீ அழைத்துச் செல்ல முடியாது. இவர் சிவராத்திரி அன்று கண்விழித்தார். சுவாமிக்கு திருவிளக்கை ஏற்றினார். சுவாமி பிரசாதத்தை உண்டார். அதன் பலனாக பெரும் புண்ணியம் பெற்றார். இவர் செய்த பாபங்கள் மறைந்தன. அடுத்த ஜென்மாவில் பெரும் அரசனாகவும், சிவபக்தனாகவும் பிறக்கப் போகிறார்’ என்று அழைத்துச் சென்றார்கள்.
மறுஜென்மாவில் கலிங்க தேசத்தில் அருந்தமன் என்பவருக்கு தமன் என்ற பெயருடன் பிறந்தார். கடுந்தவத்தால் சிவதரிசனம் பெற்றார். (சிலர் இவர் குருடனாகப் பிறந் ததாகவும் சிவதரிசனத்தால் பார்வை பெற்றதாகவும் கூறுகிறார்கள்) சிவன் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்க, இவரோ உமாமகேசுவரியின் ஒளிபொருந்திய தோற்றத்தில் மயங்கினார். பார்வதி தேவியின் சாபத்தால் கண்களை இழந்தார். தவறை நினைத்து வருந்தியதால் பொற்கண்களைப் பெற்றார். இவரை சிவபெருமான் வடதிசையின் அதிபதியாக்கினார். குபேரன் சுக்கிரபகவானை எதிர்த்து அவருடைய கர்வத்தை பங்கப்பட வைத்த பெருமையையும் உடையவர்.
தந்தையின் சொல்லுக்கேற்ப, இலங்கையை ராவணனுக்குக் கொடுத்துவிட்டு, அழகாபுரி பட்டணத்தை உருவாக்கி அதன் அதிபதியானார். அஷ்வக்ரரின் அருள் பெற்றவர். இவரது மனைவியின் பெயர் சித்ரரேகை. இவர் நரனை வாகனமாகக் கொண்டவர். இவரது புதல்வனின் பெயர் நளகூபரன். இவர் புஷ்பக விமானத்தின் சொந்தக்காரர்.
கடவுளுக்கே கடன் தந்தவர்!
கலியுகத்தில் வரம்தரும் தெய்வமாம் திருமலைவாசன் திருப்பதியில் எழுந்தருளினார். இந்த ஏழுமலையானைப் பற்றி தாளபாக்கம் அன்னமய்யா 32,000 பாடல்கள் பாடியுள்ளார். 1491-ம் ஆண்டு மசிண்டி வேங்கடத் துறைவார் என்பவரால் வேங்கடாசல மஹாத்மியம் எழுதப்பட்டது. வராஹ புராணம், பத்ம புராணம், கருட புராணம், மார்க்கண்டேய புராணம் போன்ற பல புராணங்களிலிருந்து மகாத்மியம் தொகுக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.
ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருமஞ்சனம் பிரசித்தி பெற்றது. 1583-ல் இவரது திருமஞ்சனப் பெருமைகளை கல்வெட்டில் காண முடியும். இவரின் அபிஷேகத்திற்காக விசேஷ குங்குமப்பூ, வாசனைத் திரவியங்கள், அரைத்த சந்தனம், தங்க வட்டிலில் வைத்து திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 21 அடி நீளமுள்ள பட்டு பீதாம்பரம் வெள்ளிக்கிழமையன்று அணிவிக்கப்படுகிறது. ஒருமுறை அணிந்த வஸ்திரத்தை ஸ்வாமி மறுமுறை அணிவதில்லை. இவ்வளவு புகழ்பெற்ற ஸ்வாமியின் திருக்கல்யாணத்திற்கு நிதி கடனாகக் கொடுத்தவர் குபேர பகவான்.
இப்போதும் இவர் எழுதிய கடன்பத்திரம் வடமொழியில் உள்ளதாகக் கூறுவார்கள்.
எழுதச் சொன்னவர் பிரம்மா. எழுதிக் கொடுத்தவர் ஸ்ரீனிவாசன். எழுதி வாங்கியவர் குபேர பகவான். அதில் உள்ள வாசகம் கலியுகத்தில் விளம்பி வருஷத்தில் வைசாக மாதத்தில் வளர்பிறையில் ஏழாவது நாளன்று ஸ்வாமி கடன் வாங்கியதாகவும், கடன் வாங்கிய தொகை ராமர் முத்திரையுடன் கூடிய 14 லட்சம் தங்கக்காசு எனவும் இது ஆயிரம் வருடத்தில் வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இதற்கு சாட்சியாக பிரம்மாவும், இரண்டாவது சாட்சியாக சிவபெருமானும், மூன்றாவது சாட்சியாக அரசமரமும் உள்ளதாகக் கூறுவார்கள்.
ஸ்வாமிக்கே கடன் கொடுத்த குபேரனை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதி கிடைத்தது போல், அயாசகன் என்ற ஏழை பிராமணனுக்கு ஆதிசங்கரர் அருளால் தங்க நெல்லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்தது போல், பெரும் செல்வம் கட்டாயம் வீடு தேடி வரும்.
ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசேஷம். தவிர வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையை செய்யலாம்.
குபேர பகவான் படம், யந்த்ரம் அல்லது கலசத்திலோ ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். முதலில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பூஜித்துவிட்டு குபேர பகவானை பூஜை செய்வது உத்தமம். நவக்கிரஹ தான்யங்கள் வைத்து அதில் நவக்கிரஹங்களை ஆவாஹனம் செய்து நவக்கிரஹங்களுடன் குபேர பூஜையை சேர்த்து செய்யலாம். குபேர பூஜையுடன் லோக பாலகர்களையும் நவக்கிரங்களையும் சேர்த்து பூஜிக்கும் வழக்கம் உண்டு.
கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செய்து பூஜிப்பது விசேஷம்.
இப்பூஜையை விரிவாக செய்ய முடியாதவர்கள் லக்ஷ்மியை அர்ச்சித்து வழிபாடு செய்து, குபேர பகவானையும் வழிபாடு செய்து அவர் மந்திரத்தையும் ஜபிக்கலாம்.
விரிவாக செய்வதானால் ஸ்ரீசுக்தத்தால் மஹாலக்ஷ்மிக்கு சோடச உபசாரங்கள் செய்து லோக பாலகர், நவக்ரஹ பூஜை விரிவாக செய்து குபேர பகவானையும் அர்ச்சித்து விமரிசையாக பூஜை செய்யலாம்.
ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபா யஸ்வாஹா
என்னும் இந்த குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
(Source : harikrishnamurthy.wordpress.com)

No comments:

Post a comment

Note: only a member of this blog may post a comment.