Scroll

Putra Kameshti Homam on 13/10/2018 @ Chennai and registration Module has been started now

08 December 2013

Kanchipuram

காஞ்சிபுரம் 

ஆலயங்கள் மிகவுண்டு அருளாற்றல் நிறையவுண்டு

சிலமுக்கிய கோவில்கள்:-

கோவில் நகரமான காஞ்சியில் எல்லாமே முக்கியமானவை. இடங்கருதி, காலங்கருதி சிலவற்றைக் காண்போம்.

1. சிவகாஞ்சி:- 
பெரிய காஞ்சிபுரம்-ஏகாம்பரநாதர் கோவில் சிறப்புடையது. பாடல்பெற்ற தலங்கள் ஐந்து, கயிலாசநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில்கள் உள்ளன.

2. விஷ்ணு காஞ்சி:-
சின்னக் காஞ்சிபுரம்-இங்கு வரதராஜப் பெருமாள் கோவில் சிறப்புடையது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்கள் பதினான்கு, மற்றும் புராணச் சிறப்புடையவை நான்கு.

3. பிரம்ம காஞ்சி:-
மத்திய காஞ்சி-காமாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆதி சங்கரர் அமைத்த ஸ்ரீசக்கரத்திற்கே பூஜைகள்.

4. பௌத்த காஞ்சி:-
பௌத்த துறவி அறவண அடிகள், மணிமேகலை ஆகியோர், தற்போது தொடர் வண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள அறப்பணச்சேரி என்னும் கிராமத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

5. ஜினகாஞ்சி:-
வேகவதியாற்றின் கரையின் தென்கரையில் உள்ள திருப்பருத்திக் குன்றத்தில் சமணமத தீர்த்தங்கரர் கோவில்கள் இரண்டு மட்டும் தற்போது உள்ளன.

அத்தியூர்:-
வரதராஜப் பெருமாள் இருக்கும் இடத்திற்கு அத்தியூர் என்ற பெயரும் உண்டு. வேகவதியாற்றின் கரையில் பிரம்மா செய்த யாகத்தினால் மஹாவிஷ்ணு புண்ணியகோட்டி விமானத்தில் காட்சி தந்தருளினார். ஐராவதம் என்ற யானை மலைபோல் நின்று விமானத்தைத் தாங்கியதால் அத்திகிரியாக விளங்கி தற்போது அத்தியூர் என மருவியுள்ளது. பிரம்மனுக்கு வரங்கள் அளித்ததால் வரதர் எனப்பட்டார்.

அத்தி வரதர்:-
அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதர் கோவில் குளத்து நீரில் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

கல்விக்ரகம் ஏற்பாடு செய்த பின்னர் அத்திவரதர் குளத்துள் இருக்கிறார்.

நாற்பதாண்டுகட்கு ஒருமுறை அத்தி வரதரை வெளிக்கொணர்ந்து அலங்காரங்கள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு மண்டலம் வைத்து வழிபாடுகள் செய்து பின் குளத்தில் மத்தியில் உள்ள நீராழி மண்டபம் இருப்பதால் அங்கு தெப்போற்சவம் சிறப்புறச் செய்து தாயாரும் பெருமாளும் தெப்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

கோவிலுக்கு வெளியே தாயார் வருவதில்லை.

வைகாசிமாதம் நடைபெற்ற கருட சேவையைக் கண்டு ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் மணிமாலையை அளித்த வரலாறு உண்டு.

கருடசேவையில் காண முடியும். மற்றும் திருத்தண்கா என்ற விளக்கொளிப் பெருமாள் கோவில் உள்ளது. தீபப் பிரகாசர் என்பர்.

திருப்பாடகம்-பெருமாள் திருநாமம் பாண்டவ தூதர். கல்வெட்டில் தூதஹரி என்றுள்ளது. தாயார் ருக்மணி, சத்யபாமா, பெரிய காஞ்சியில் உள்ளது.

பரமேஸ்வர விண்ணகரம்:-
பெருமாள் பரமபதநாதன், தாயார் வைகுந்த வல்லி, வைகுண்ட ஏகாதசி மிக விமரிசையாக நடைபெறும். கோவிலின் எதிரில் திருக்குளம். பல்லவ சிற்பங்கள். வரலாறுகள் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன.

திருஊரகம்:-
உலகளந்த பெருமாள், தாயார் அமுதவல்லி, உலகை அளந்த பேருருவம். உயர்ந்த காட்சி முழுவதும் காண தீவட்டி மூலம் பார்க்கலாம். இக்கோவிலின் மதிலுக்குள்ளே திருக்காரகம், திருக்கார்வானம் என்னும் திவ்யதேசங்கள் இருப்பதைக் காணலாம்.

திருநீரகம்:-
பெருமாள் ஜெகதீசன், தாயார் திருமங்கை வல்லி, இதுவும் உலகளந்த பெருமாள் கோவிலில் காணலாம்.

திரு நிலாத் திங்கள் துண்டம்:-
பெருமாள்-நிலாத்திங்கள் துண்டத்தான். தாயார்-நேர் ஒருவர் இல்லா வல்லி.

திருப்பவள வண்ணம்:- பெருமாள்-பவள வண்ணன். தாயார்-பவள வல்லி. பெரிய காஞ்சியில் அமைந்துள்ளது.

திருவேளுக்கை:- பெருமாள்-முகுந்த நாயகன். தாயார்-வேளுக்கைவல்லி. பெரிய காஞ்சியில் உள்ளது.

திருக்கள்வனூர்:- பெருமாள்-ஆதிவராகப் பெருமாள். தாயார்-அஞ்சிலைநாச்சியார். இந்த சந்நிதி காமாட்சியம்மன் கோவிலுக்குள் இருக்கிறது.

இவை தவிர புராணச் சிறப்புப் பெற்றவை முகுந்த பெருமாள், நரசிங்கப் பெருமாள், உள்ளுவார் உள்ளத்தான், பச்சை வண்ணர், இவை நான்கும் பெரிய காஞ்சியில் உள்ளன.

தீர்த்தங்களும் தலங்களும்:-

ஞாயிறு-இட்ட சித்தி தீர்த்தம்:- இது கச்சபேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது.

திங்கள்-சிவகங்கை தீர்த்தம்:-

இது திருவேகம்பர் கோவிலின் உள்ளே வடபுறம் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில் நீராடி இறைவனைப் பணிபவர் பேறு பல பெற்றிடுவார்.

செவ்வாய்-மங்கள தீர்த்தம்:- இறைவியின் தோழி மங்களை என்பவள் மண்டபம் உண்டாக்கி மங்களேஸ்வரரை நிறுவினார். செவ்வாய்க் கிழமை நீராடி மங்களேஸ்வரரை வணங்குவோர் இருமைப் பேறு பெறுவார்.

புதன்-இந்திர தீர்த்தம்:- சத்தியநாதர் திருக்கோவிலின் மேற்கே உள்ளது. இங்கே புதன் கிழமைகளில் நீராடி சத்திய நாதரை வழிபட்டால் இருவினை நீங்கும். திருநெறிக் காரைக்காடு என்னும் பாடல் பெற்ற திருத்தலம்.

வியாழன்-காயாரோகண தீர்த்தம்:- வேகவதி நதிக்குத் தெற்கில் உள்ளது. வியாழக்கிழமைகளில் நீராடி காயாரோகணப் பெருமாளை வணங்கினால் விரும்பிய பயன்களோடு முக்தியும் உண்டாம். தற்போது தாயார் குளம் என வழக்கில் உள்ளது. ஐங்கோண வடிவமைப்புடையது. நீத்தார் வழிபாடுகள் இக்குளக்கரையில் நடைபெறுகின்றன.

வெள்ளி-உலகாணி தீர்த்தம்:- இது காமாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் நீராடி அன்னையை வணங்கினால் தம் விருப்பங்களைத் தடையின்றிப் பெறுவர். பஞ்சபூதங்கள் பெயரால் உருவாக்கப்பட்ட தீர்த்தமாதலின் பஞ்சதீர்த்தம் என்பர். பஞ்சபூதசக்திகள் பற்பல நன்மைகளைத் தரும்.

சனி-சர்வ தீர்த்தம்:- உலக தீர்த்தங்கள் ஒன்றாகி அமைந்த தீர்த்தம். சனிக்கிழமை தோறும் நீராடி, தீர்த்தக்கரையில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்தால், கோள்களால் வரும் தீங்கு நீங்கும். காஞ்சியில் சிறந்த தீர்த்தமாகும்.

வைகாசி மாதம் ஏகாம்பரேஸ்வரர் தெப்ப உற்சவம் இங்குதான் நடைபெறும். இக்குளக்கரையில் நீத்தார் வழிபாடு நடைபெறும். மற்றும் வைணவக் கோவில்களிலும் புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

நிறைவாக:-
வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தோன்றி சீர்மிக்க நகரமாக விளங்கி வருகிறது காஞ்சி மாநகர். பாரத நாட்டின் கல்வி, கலை, தொழில், ஆன்மிகம் எனப் பல்வகையாலும் புகழ் பெற்று, நிலையாக வரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக அமைந்த காஞ்சிநகர் பற்றி சிறிதே சிந்தித்தோம்.

கல்வியில் கரையிலாக் காஞ்சி என்ற பெருமையோடு கலைகள் வளர்த்த நகருக்கு ஒரு முறை சென்று தரிசித்து வாருங்களேன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.